வெண்டைக்காய் சப்ஜி
தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 4, தக்காளி - 2, பூண்டு - 4 அல்லது 5 பல், சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் - 4 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெண்டைக்காயை வதக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீண்டும் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும்.
பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்க்கவும். அதில், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இது கரண்டியால் எடுத்து விட்டுக் கொள்ளும் பதத்துக்கு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இதே போல் கோவைக்காயிலும் சப்ஜி செய்யலாம்.
முள்ளங்கி மசாலா கறி
தேவையானவை: வெள்ளை முள்ளங்கி - அரை கிலோ, உருளைக்கிழங்கு - 1, வெங்காயம் - 1, இஞ்சி - ஒரு துண்டு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கி, உருளைக்கிழங்கை வேக வைத்து கைகளால் பொடிமாஸ் போல் உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாயை தாளித்து வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
உதிர்த்து வைத்திருக்கும் முள்ளங்கி, உருளைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். கடைசியில் கரம் மசாலாத்தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கிளறவும். கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
கோவைக்காய் - உருளை வதக்கல்
தேவையானவை: கோவைக்காய் - அரை கிலோ, உருளைக்கிழங்கு - 2, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயையும் உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் கோவைக்காய், உருளைக்கிழங்கை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடவும். இடையிடையே நீர் தெளித்து நன்றாக வேக விடவும். கடைசியில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.
பீட்ரூட் மசாலா கறி
தேவையானவை: பீட்ரூட் - கால் கிலோ, வெங்காயம் - 2, தக்காளி - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி இரண்டையும் வதக்கிக் கொள்ளவும். நறுக்கிய பீட்ரூட்டை போட்டு வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடவும். காய் நன்றாக வெந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிளகுத்தூளை போட்டு 5 நிமிடம் வதக்கவும். காரம் தேவைப்பட்டால் மேலும் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
கேரட் - பனீர் குருமா
தேவையானவை: கேரட் - கால் கிலோ, பனீர் - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, பூண்டு - 2 பல், வெங்காயம் - 4, தக்காளி - 4, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - 4 துண்டு, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, பிரிஞ்சி இலை - 2, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை அவியலுக்கு நறுக்குவது போல் நீளமாகவும், வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது வெங்காயத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதுப் போட்டு வதக்கவும். கேரட், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். தக்காளி, மீதமுள்ள வெங்காயம் இரண்டையும் லேசாக வதக்கி சேர்க்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பை பொடித்து இதில் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இறுதியில் பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி, வதக்கி சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கோவைக்காய் - உருளை வதக்கல்
தேவையானவை: கோவைக்காய் - அரை கிலோ, உருளைக்கிழங்கு - 2, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயையும் உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் கோவைக்காய், உருளைக்கிழங்கை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடவும். இடையிடையே நீர் தெளித்து நன்றாக வேக விடவும். கடைசியில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.
நவரத்ன குருமா
தேவையானவை: வெங்காயம் - 2, தக்காளி - 3, பச்சை பட்டாணி - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, பூண்டு - 4 பல், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் - சிறிதளவு, கேரட் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கசகசா, முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் அனைத்தையும் ஒரே அளவில் நறுக்கி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளியை சேர்த்து கொதிக்க விடவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்த காய்களை சேர்க்கவும்.
இதில் கசகசா, முந்திரிப்பருப்பு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். தனியாக ஒரு கடாயில் முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சௌசௌ சப்ஜி
தேவையானவை: சௌசௌ - 2, உருளைக்கிழங்கு - 1, வெங்காயம் - 2, பச்சை பட்டாணி - அரை கப் , இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்துருவல் - 3 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சௌசௌவை பொடியாக நறுக்கவும். பச்சை பட்டாணியையும் உருளைகிழங்கையும் வேக வைக்கவும். தேங்காய்துருவல், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் வேக வைத்துள்ள காய்கறிகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சின்ன வெங்காயம் - தக்காளி மசாலா
தேவையானவை: சின்ன வெங்காயம், தக்காளி - கால் கிலோ, பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 2, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். இதில் பாதி எடுத்து தக்காளி சேர்த்து லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, மீதமுள்ள வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். முழு பச்சைமிளகாயை சேர்க்கவும். இந்த வதக்கலுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கிளறி நன்கு கொதி வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம். காரம் தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.