தானிய காய்கறி சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், ஊற வைத்த தானிய கலவை - கால் கப், வெங்காயம் - 1, தக்காளி - 2, நறுக்கிய காய்கறி கலவை - ஒரு கப், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஊற வைத்த தானியங்களுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும், அதில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

காய்கறிகள் வெந்ததும் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஊற்றவும். அதில் பெருங்காயம், உப்பு சேர்த்து கொதித்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பரங்கிக்காய் சூப்

தேவையானவை: பரங்கிக்காய் - ஒரு துண்டு, வெங்காயம் - 1, தக்காளி - 1, பால் - அரை கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பூண்டு - 2 பல், எண்ணெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை: பரங்கிக்காயின் தோலை சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, பூண்டு, தக்காளி, வெங்காயம், பரங்கிக்காயை சேர்த்து வதக்கவும். 10 நிமிடம் வதங்கியதும் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த சூப்பை மீண்டும் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கி, பால், மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

வெஜிடபிள் சீஸ் பர்கர்


தேவையானவை: கட்லெட் செய்ய: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், வேக வைத்த காய்கறி கலவை - அரை கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா (அ) கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் - கால் கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க.

பர்கர் செய்ய: பன் - 1 (அ) பிரெட் - 2 ஸ்லைஸ், வெண்ணெய் - சிறிதளவு, துருவிய கேரட் - சிறிதளவு, மிகவும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - சிறிதளவு, தக்காளி சாஸ் - சிறிதளவு.

செய்முறை: எண்ணெய் நீங்கலாக கட்லெட்டுக்கு கொடுத்துள்ள பொருட்களை பிசைந்து கொள்ளவும். அதை சிறு கட்லெட்டுகளாக செய்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

பன்-ஐ குறுக்கு வாக்கில் இரண்டாக வெட்டி, இரண்டு துண்டிலும் வெண்ணெயைத் தடவவும். இதனை தோசைக்கல்லில் போட்டு லேசாக சூடாக்கிக் கொள்ளவும். ஒரு துண்டின் மேல் துருவிய கேரட், முட்டைகோஸை தூவவும். அதன் மேல் ஒரு கட்லெட்டை வைத்து, சிறிதளவு சாஸ் ஊற்றி, வெட்டி வைத்திருக்கும் மற்றொரு துண்டு பன்னால் மூடி பரிமாறவும்.

கீரை அடை



தேவையானவை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், புழுங்கல் அரிசி - அரை கப், பொடியாக நறுக்கிய ஏதாவது ஒரு கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: எல்லா பருப்புகளையும் ஒன்றாகவும் அரிசியை தனியாகவும் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். முதலில் அரிசியை போட்டு அரைத்து, அதனுடன் பருப்புகளை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் கீரை, வெங்காயம், மிளகுத்தூள், சீரகத்தூள், பச்சைமிளகாய், தயிர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும் சிறிய அடைகளாக போட்டு எடுக்கவும்.

காய்கறி சட்னி இந்த அடைக்கு ஏற்ற சைட்-டிஷ்!

This entry was posted on Monday, July 21, 2008 at 11:10 AM and is filed under . You can follow any responses to this entry through the comments feed .

0 comments

Post a Comment